கர்நாடிக் & பஜன்ஸ் முகநூல் குழுவினர் நடத்திய உடையாளூர் கல்யாணராமன் பஜன் நிகழ்ச்சி By பாலாம்பாள் நாராயணன் (பாலசரஸ்வதி)
First Published : 08 August 2013 10:02 PM IST
கிழக்கு தாம்பரம் அருகிலுள்ள காமராஜபுரம் வேதவியாஸர் தபோவனத்தில் 06-08-2013 மாலை, முகநூல் நண்பர்களின் "கர்னாடிக் & பஜன்ஸ்" குழு சார்பாக, உடையாளுர் கல்யாணராம பாகவதர் மற்றும் குழுவினரின் சம்ப்ரதாய பஜன் நிகழ்ச்சி நடைபெற்றது.
"கர்னாடிக் & பஜன்ஸ்" குருப்பின் (FACEBOOK) இரண்டாம் ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி நடத்தப்பட்டது இந்த நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு முக நூல் குழு உறுப்பினர்கள், குழுவின் நிர்வாகிகள் (அட்மின்) கலந்து கொண்டனர். பொது மக்களும் வந்து சிறப்பித்தனர். நிகழ்ச்சியில், கும்பகோணம் அனந்தநாராயணன் வைத்யநாதன் விநாயக பூஜையுடன் நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்தார். தொடர்ந்து சேலையூர் சகோதரர்களின் நாதஸ்வர இசையுடன் நிகழ்ச்சி ஆரம்பித்தது. தேனினும் இனிய குரலால் டாக்டர் லக்ஷ்மியின் இறை வணக்கப் பாடல், மோகனத்தில் "ஸ்வாகதம் கிருஷ்ணா" பாடியவுடன் நிகழ்ச்சி களை கட்டத் தொடங்கியது. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக "ராணி மேரி கல்லூரியின் முதுகலை மற்றும் ஆராய்ச்சி, சங்கீதத்துறை தலைவர் டாக்டர் எம்.ஏ. பாகீரதி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
உடையாளுர் கல்யாணராமனின் நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி மாலை 05-05க்கு துவங்கியது. நாம சங்கீர்த்தனம் என்றாலே கல்யாணராம பாகவதரின் கம்பீரம் மற்றும் இனிமை கலந்த குரல், அவரது பக்தி பாவம், பக்க வாத்யங்களின் அனுசரணை எல்லாம் நம் நினைவுக்கு வந்து விடும். நிகழ்ச்சியில் அவர் நாம சங்கீர்த்தனத்தின் பெருமை, பாடும் முறை (சம்ப்ரதாய முறை) ஆகியவற்றைப் பற்றி இடையிடையே விளக்கங்கள் கூறியதும் அருமை. இன்றைய நிகழ்ச்சியில் "பகவன் நாமா சொல்லுமிடமே வைகுண்டம்" என்று கூறிய கல்யாணராமன், வேதவ்யாச தபோவனத்தில் நாள்தோறும் நடக்கும் பகவத் கைங்கர்யங்கள், இசை நிகழ்ச்சி, நாம சங்கீர்த்தனம் போன்றவற்றைச் சொல்லி பாராட்டினார்.
மேலும் முகநூல் குழு இதுபோல் நடத்துவது வியப்பாக இருக்கிறது என்றார். சங்கீத மும்மூர்த்திகளுக்கு முன்பாக அவதரித்த ஸ்ரீ போதேந்த்ர குரு, ஸ்ரீதர அய்யாவாள் மற்றும் மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் மீதான குருவந்தனங்களை அருமையாகப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினார். 'பஜரே மானஸ போதேந்த்ர யோகீந்த்ரம்-பேஹாக் ராகம், குருமூர்த்தி பாதமுலே-சங்கராபரண ராகம். பஜே சத்குரும்-சஹானா ராகம் இவற்றைத் தொடர்ந்து ரஞ்சனி ராகத்தில் சந்த்ரசேகர யதீந்தர வரதம் என்ற பாடலை உருக்கமாகப் பாடினார்.
பிறகு 'ஹரிமுகே மன' ப்ருந்தாவன சாரங்காவைத் தொடர்ந்து, 21-ம் அஷ்டபதி, "மஞ்ஜுதர குஞ்ஜதல" கண்டா ராகத்தில் பாடியது செவிக்கு விருந்தாக அமைந்தது. 'நமோ நமோ ஸ்ரீ நாராயணா' என்ற நாமாவளி தொடர்ந்து பாடியது வெகு ஜோர். நாம சங்கீர்த்தன சம்ப்ரதாயப்படி அஷ்டபதியைத் தொடர்ந்து 'கிருஷ்ண லீலா தரங்கிணி’யில் 'ஜய ஜய ரமாநாத' என்ற தரங்கப் பாடல் நாட்டையில் கச்சிதமாகப் பாடினார். கல்யாணராம பாகவதர் பத்ராசல ராமதாசர் பாடல்களைப் பாடுவதில் வல்லவர்தான். அதிலும் "ராமா தய ஜுடவே" கீரவாணி ராகத்தில் இவரது 'மாஸ்டர் பீஸ்' என்பது அவரது ரசிகர்களின் (முகநூல் குழுவும் கூட) தீர்மானமான கருத்து.
உருகி, உருகி உன்னதமாகப் பாடினார். தொடர்ந்து புரந்தரதாசரின் 'சரணு கணபதி' - ஆரபியிலும் 'நின்னனே பாடுவேன்' ரேவதியிலும் தொடர்ந்து பல நாமாவளிகள். "வித்தாகி விளைவாகி' என்ற விருத்தம் அமீர் கல்யாணியில் பாடி. "ஏதோ தெரியாமல் போச்சுதே" என்ற கோபால கிருஷ்ண பாரதியின் பாடலைப் பாடினார். அடுத்து ரசிகர்களின் விருப்பத்தையொட்டி "முத்தான முத்துக்குமரா" "க்ருபாகரி பண்டரிநாதா" மற்றும் ஒரு சில அபங்கங்கள் பாடி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இணைந்து பாடிய ப்ருஹா பாலு, பிச்சுமணி பாகவதர் மிருதங்கம் வாசித்த பாபு ராஜசேகரன், ஹார்மோனியம் வாசித்த ராஜாமணி மற்றும் டோல்கி அனுசரணையுடன் ஒத்துழைப்பு கொடுத்து பஜன் நிகழ்ச்சியை சிறப்புறச் செய்தனர்.
நன்றி உரை ஆற்றிய முகநூல் குழுவின் நிர்வாகி வித்யா-தபோவனத்தின் குருஜி, மேலாளர் நாராயணன், கல்யாணராமன் குழுவினர், குழுத் தலைவர் வெங்கட் நாராயணன், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கலாமாலினி ஆகியோரைப் பாராட்டிப் பேசினார்.
நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முகநூல் போன்ற ஊடகங்கள் மூலம் நாம சங்கீர்த்தனம் (இந்தக் குழு மூலம்) உலகில் பல இடங்களுக்கு வெப் ரேடியோ மூலம் பி.சுப்ரமணியன் வெள்ளி, சனி இரண்டு நாட்களும் ஒளிபரப்பு செய்வது சிறப்பான அம்சம். இந்நிகழ்ச்சி வெப் டெலிகாஸ்ட் மூலம் நேரலையாக்கப்பட்டது. வெங்கட்நாராயணன் மூலம், அமெரிக்கா, துபாய், டில்லி, பம்பாய், பெங்களுர் முதலிய ஊர்களில் இருந்து நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க வந்தனர், விழாக் குழுத் தலைவர் ஸ்ரீதர், பொருளாளர் வாசன் மற்றும் ப்ரியா, கலா, வரகூரான், ரவிச்சந்திரன் வித்யா, வெங்கட்நாராயணன், தபோவனம் நாராயணன் ஆகியோர் நிகழ்ச்சி நடைபெற சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். Click here to Join to this Carnatic & Bajans FACEBOOK group - https://www.facebook.com/groups/cbquestions/ !!!
|